21 செப்., 2014

மழைப்பாறை நாவலை முன் வைத்து,,,,,,,,

                               
                                       அண்மையில் வெளிவந்துள்ள எனது

                                    “மழைப்பாறை” நாவலை முன்வைத்து,,,,,,,

வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை உறையச் செய்துவிடும். சில திரைப்படங்கள் உங்களை நாட்கணக் கில் தூங்கவிடாது வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து விடுபட எத்தனையோ அடுத்தடுத்த நிகழ் வுகள், வேறு வேறு கேளிக்கைகள், புதிய நூல் அனுபவங்கள் என்று தப்பி வெளி யேறிவிட முடியும். காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக உதறித் தள்ள முடியாத அடையாளங்களோடு பிறந்து வாழ நேர்கிற மனிதர்கள் அவற்றிலிருந்து எப்படி விடுபட?
மற்ற நூல்களைப்போல் அத்தனை இலகுவாய்க் கடந்துவிடாத பக்கங்களை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. நூலின் கட்டமைப்பு முக்கிய காரணம். அதைவிட முக்கியமான அம்சம், நான் அதிகம் அறிந்திராத இனக்குழுவைச் சார்ந்த மக்களது வாழ்க்கைதான் கதைக் களம். ‘சலவான்‘ நாவலால் அறியப்பட்டிருக்கும் பாண்டியக்கண்ணனின் இரண்டாவது நாவலான “மழைப்பாறை” பல கேள்வி களையும், விவாதங்களையும் எழுப்பிய வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.

குறவர் என்றால் பொதுவான புரிதல் நரிக்குறவர்களைப் பற்றியதாகவே இருக் கிறது. ஆனால், தமிழகத்தில் 28 வகைக் குறவர்கள் உள்ளனர் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. தங்களது வாழிடத்தையும், தங்களது வாழ்வாதாரங்களையும் பறி கொடுத்த குறவர்கள் வனப்பகுதியிலி ருந்து சமவெளிப் பகுதிக்குப் பெயர்ந்து பல்வேறு தொழில்களால் தங்களது பிழைப்பைத் தேடிக் கொண்டிருக்க, அவர்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றப் பரம்பரை அடையாளம், தீண் டாமை, சாதிய இழிவு உள்ளிட்டவற்றால் அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைக ளின் ஓர் ஆவேசத் தீற்றலாக வந்திருக்கி றது “மழைப்பாறை” என்று கொள்ள முடியும்.

நாவல் முன்னும் பின்னுமாக காலக் கணக்கைப் புரட்டிப் போட்டபடி கதையை மொழிகிறது. ஆய்வாளர் இளைஞர் சிவகுமார் இந்த நாவலில் காலம் கலைத்துப் போடப் பட்டிருக்கிறது என்று நேர்த்தி யாக வருணித்திருந்தார். கந்தன் பள்ளிக் கூடம் செல்லும் சிறுவனாகக் காலையில் கண் விழிக்கும் இடத்தில் தொடங்குகிறது கதை. இடையே கந்தன் நிகழ் காலத்தில் நடுத்தர வயதினராகப் பேசப் படுபவராகவும் இருக்கிறார். கதை கந்தனுக்கு முந்தைய தலைமுறையோடும், கந்தனோடும், கந்தனுக்குப் பல தலைமுறைக்கு முந்தைய வாழ்க்கை யின் சாட்சியமான நாட்டார் தெய்வத்தோடும் ஒரு சேர நடை நடந்து காட்டுகிறது. இன வரைவியலின் உட்கூறுகள் போலும், ஓர் இனக்குழுவின் பண்பாட்டுச் சுவடு களாலும் எழுப்பப்படும் இந்தக் கதை, வரலாற்றில் பதிவாகாமலே போய்விட்ட தீனக் கதறல்கள், ஆதிக்கத்தின் வன்ம சேட்டைகள் உள்ளிட்டவற்றை மௌனமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரி லிருந்தும், அணையாத நெருப்புக் கங்கு களிலிருந்தும் தேடி எடுத்து முன்வைக் கிறது.

கதை என்று தொடர்ச்சியாக எதையும் தொடங்கி வைத்து, வளரக் காட்டி, முடித்து வைக்கும் வகைப்பட்ட நாவல் இல்லை “மழைப்பாறை. ” ‘எங்களது வாழ்க்கை இன்னது’ என்று கைப்பற்றி இழுத்து இதயத் துடிப்பை நேரடியாக உணரவைப்பது போல் சொல்லும் வகையிலானது.

படிக்கும் ஆர்வமும், துடிப்பும், திறமையுமுள்ள கந்தனை அவனது வறிய குடும்பச் சூழலும், கீழ்மைப்படுத்தப் பட்டிருக்கும் சமூகப் பின்புலமும் அங்கீகரமற்றவனாக நிறுத்துவதோடு, மிக இயல்பான ஒன்றாக அவன் மோச மாக நடத்தப்படுவதில் வெளிப்படுகிறது. தேர்வு எழுதப் போகும் அவன், விடை த் தாள் வாங்கக் காசில்லாமல், கழிப்பறை சுத்தம் செய்யும்வேலையிலி ருக்கும் தாயை நாடி ஓடுவதையும், சுத்தம் செய்த கைகளாலேயே காசையும், சோறையும் பெற்றுக் கொள்ளவேண்டிய அவளது அவலத்தையும் நாவல் முன்னிறுத் துகிறது. இத்தனைப் பாடுகளுக்குப் பிறகு பள்ளிக்குள் நுழையும் அவனிடம் தேர்வு எழுதும் தகுதியை எதிர்பாராத ஆசிரியர் உலகம் பள்ளியில் அவனையே கழிப் பறை சுத்தம் செய்ய வைப்பதை மிக தன் னியல்பாக நிகழ்த்துகிறது.

ஒரு சூழ்நிலையில் ஊரைவிட்டு வெளியேறி திருட்டு ரயிலேறிச் செல்லும் போதும், டிக்கெட் பரிசோதகருக்குத் தப்பி ஓடி ஒளிய கந்தனுக்குக் கழிப்பறை தான் கிடைக்கிறது. இடையே எங்கோ இறங்கி வயிற்றுப்பசிக்குச் சோறு கேட்கும் இடத்தில், யாரோ செய்த களவுக்கு இவனைப் பிடித்துப் போகும் காவல்துறை இவன் சாதிப் பெயரைக் கேட்டதுமே முடிவுக்கு வந்துவிடுகிறது இவன்தான் திருடன் என்று.இயற்கையின் இயல்பான மலர்தலாக நிகழும் பூப்பெய்தும் பருவம், குறவர் இனப் பெண்களின் வாழ்வில் தீயின் தீண்டுதலாக நிகழ்தலின் காலத்தை நாவல் வெவ்வேறு பெண்களின் கதை வழியாக ஆதிக்க சாதி வாலிபர்களின் காம வெறியை அவர்கள் எதிர்கொண் டதை பதைபதைக்கப் பேசுகிறது. ஊருக்குப் புறத்தே குடிலில் இராப் பொழுதில் சடங்கு சம்பிரதாயமாகத் தங்கவைக்கப் படுகையில் வல்லுறவுக்கு ஆட்படும் பெண், சீமெண்ணெய் விளக்கு தவறி விழுந்து குடிசை பற்றி எரிந்த விபத்தில் சிக்கியதாக அடுத்த நாள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மரித்துப் போகும் கடந்த காலத்தின் கதையை, நிகழ்காலத் திலும் மருத்துவமனையில் பார்க்கிறார் கந்தன்.
கந்தன் தனது உயிராகக் கருதியிருந்த அக்கா லட்சுமியின் திருமணம், நூறு கிலோ இறைச்சி கொண்ட ஆண் பன்றியை (சலவான்) ஆயுதமின்றி விரட் டிப் பிடித்துக் கொன்று தூக்கி வந்து முறைப்படி தகுதி நிரூபிக்கும் முத்துப் பாண்டியுடன் நிகழ்கிறது. அந்தப் போராட்டம் அத்தனை நேரடி விவரிப்பாக அமைகிறது. சடங்குகள், சம்பிரதாயங் கள் குறித்த விவரிப்புகள் ஒரு புறம் முழுமையாக இடம் பெறும் நாவலில், அவற்றிலிருந்து மாறுபட்டு நடக்க முயற்சி மேற்கொள்ளும் கந்தனையும் காட்டுகிறது. குறிப்பாக தமது மகள் பூப்பெய்தும் பொழுதில் பாரம்பரிய சடங்குகளைச் செய்யாது பார்த்துக் கொள்கிறார் அவர்.

கந்தன் குடும்பத்தோடு குலதெய்வ பூஜைக்குப் புறப்படும் பயணத்தினூடே அவரது இளமைக் காலக் காதலும், சாகசமும், அதன் சோக முடிவும் சாதிய பொருளடக்கத்தோடு வந்து போகிறது. ஆனாலும் தமக்கு மேல் கட்டுமானத்தில் இருக்கும் சாதிப் பெண்ணோடு ஒரு சூழலின் நிமித்தம் நடைபெறும் திரு மணத்தின் பதற்றக் காட்சிகளும் பின் னோக்கி அழைத்துச் சென்று சொல்லப்படுகின்றன.

சாதி கடந்து நீதியோடு நடந்து கொள்ளும் மனிதர்களும், அப்படியான நேரங்களும் - காவல் நிலையத்திலும் கூட, நாவலில் இடம் பெறவே செய்கின் றன. ஆனால் சாதியின் முடிச்சு எத்தனை இறுக்கமானது என்பது கந்தனை அவன் திறமை பாராட்டப்பட்டபோதும் ஊர் நாடகக் குழுவில் நடிக்க விடாது சாதுரி யமாக கழித்துக்கட்டும் விதத்தில் உரத்துச் சொல்லப்படுகிறது.
சந்தனம் - கூடம்மாள் தம்பதியினரே கந்தன் குடும்பத்தின் பல தலைமுறைக்கு முந்தைய சாதியக் கொடுமையால் பழி வாங்கப்பட்ட அடையாளம்.

ஆடையுருவி அவமானத்துக்கு உள்ளாக்கப்படும் கூடம்மாளின் வெஞ்சினம் கண்ணகி கதைபோலவே ஊரைத் தண்டிக்கிறது. வல்லுறவுக்கு அலைந்த ஆதிக்க சாதியினரை அவர்களது காமத்தின் எதிர்முனையிலிருந்து விரட்டி விரட்டித் திண்டாட வைத்துத் திணறடிக்கிறது. ஓய்ந்துபோய் மண்டியிட்டுப் புலம்பி மன்றாடி மன்னிப்பு கேட்கும் ஜமீன் சார்ந்த மக்களைக் கொண்டே தனக்கு சிலை வடிக்க வைத்து மறைந்து போகிறாள் கூடம்மாள்.

அந்தக் கோயிலில் வந்து நின்று கந்தன் குடும்பம் கும்பிடுமிடத்தில் நாவல் முற்றுப் பெறுகிறது. கூடம்மாளை தண்டித்துத் தீர்ப்புச் சொல்லும் பாலியல் வக்கிரமான ஜமீன் பாத்திரமும் கூட, அவளது சினத்தால் அலைந்தழியும் ஊராரின் வெறிக்குத் தப்ப முடியாத இடத்தைப் பேசுகையில் அவர் அலியாக மாறினார் என்ற விவரிப்பு கேள்விக்குள்ளாகிறது. சொந்த வாழ்வனுபவத்தை முடிந்தவரை பதிவு செய்யும் வேட்கை ஆசிரியருக்கு இருந்திருக்கலாமோ என்று சில இடங்களில் தோன்றியது. காலத்தைக் கலைத்துப் போட்டு எழுதப்படும் ஒரு நாவலை மிக எளிதாக நகர்த்தி வாசிக்க முடியாதது போலவே, அது ஏற்படுத்தும் மன அதிர்வு களைக் கடப்பதும் எளிதானதன்று. அடுத்த நாவலுக்கான முயற்சியில் இறங்கும் நம்பிக்கை பாண்டியக் கண்ணனுக்கு அதுவே ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் வரவேற்புக்குரியது.
************
எஸ். வி வேணுகோபால்
நன்றி: இலக்கிய சோலை: தீக்கதிர் (செப் 21, 2014)

1 கருத்து:

vimalanperali சொன்னது…

அர்த்தப்பூர்வமான ஆய்வுக்கட்டுரை,,,,வாழ்த்துக்கள்.